Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 18 கிராமங்களை ஊராட்சியாக மாற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஆக.12: திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 18 கிராம ஊராட்சிகளை, மீண்டும் ஊரக பகுதியில் சேர்க்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாநகராட்சியாக கடந்த ஆண்டு தரம் உயர்த்தியபோது, அதனை சுற்றியுள்ள கிராம ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. அதனால், தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதால் மீண்டும் ஊரக பகுதியுடன் இணைக்க வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இப்போரட்டத்தில், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள மலப்பாம்பாடி, நொச்சிமலை, துர்க்கை நம்மியந்தல், தேவனந்தல், சோ.கீழ்நாச்சிபட்டு, கீழ்கச்சராப்பட்டு, ஏந்தல், சின்னகாங்கேயனூர், நல்லவன்பாளையம், மேலத்திக்கான், அத்தியந்தல், வேங்கிக்கால், ஆணாய்பிறந்தான், காவேரியாம்பூண்டி, தென்மாத்தூர், அடிஅண்ணாமலை, ஆடையூர், சாவல்பூண்டி ஆகிய 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் நூறு நாள் வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டது. வீட்டு வரி, குடிநீர் வரி போன்றவை உயர்ந்துவிட்டது. புதிய குடிநீர் இணைப்பு கட்டணமும் உயர்ந்திருக்கிறது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். எனவே, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 18 கிராம ஊராட்சிகளையும், மீண்டும் ஊரக பகுதியுடன் இணைத்து கிராம ஊராட்சிகளாகவே செயல்பட அனுமதிக்க வேண்டும் என முழக்கமிட்டனர். அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், தங்களுடைய கோரிக்கை மனுவை, கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.