வந்தவாசி, ஆக.12: வந்தவாசி அருகே ஏரிக்கரையில் இருந்த 20 ஆண்டுகள் பழமையான 2 சந்தன மரங்களை மர்ம கும்பல் வெட்டி கடத்தி சென்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் ஏரிக்கரையில் சுமார் 30க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் 15 முதல் 20 ஆண்டுகளாக வளர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம கும்பல் ரூ.10 லட்சம் மதிப்பிலான 20 ஆண்டுகள் பழமையான 2 சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்றுள்ளனர்.
நேற்று ஏரிக்கரையோரம் ஆடு மேய்க்க சென்றவர்கள் சந்தன மரங்கள் கடத்தப்பட்டிருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தெய்யார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கிராமத்தின் கூட்ரோடு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நள்ளிரவு நேரங்களில் வந்த வாகனங்கள் குறித்து விசாரணை நடத்தி, மர்ம கும்பலை தேடி வருகின்றனர். சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



