செய்யாறு அருகே 3 வயதான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
திருவண்ணாமலை, ஆக 12: செய்யாறு அருகே 3 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வட மாநில கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது. ஹிமாச்சலபிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டம், நாதோன் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்சந் மகன் தேசுராஜ்(48). இவர், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, பில்லாந்தாங்கல் கிராமத்தில் தங்கி சாலை அமைக்கும் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 21.1.2025 அன்று காலை அதே கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, பால் வாங்க பாட்டியுடன் சென்றுள்ளார். பால் வாங்கிக்கொண்டு பாட்டி வீடு திரும்பிய பிறகும், சிறுமி வீடு வரவில்லை.
எனவே, சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய் தெருவுக்கு சென்று தேடியுள்ளார். அப்போது, வடமாநில தொழிலாளி தேசுராஜ் தங்கியிருந்த வீட்டில் இருந்து சிறுமி அழுதபடியே வெளியே வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால், சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது, 3 வயதே ஆன சிறுமியிடம் வட மாநில தொழிலாளி தேசுராஜ், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, வடமாநில தொழிலாளி தேசுராஜை பிடித்து செய்யாறு மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, செய்யாறு மகளிர் போலீசில் சிறுமி கொடுத்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, தேசுராஜை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, 3 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தேசுராஜ் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தேசுராஜை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.



