Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரிஷபேஸ்வரர் கோயிலில் இருப்பது அகத்திய முனிவரின் ஜீவ சமாதி தான் ஆய்வில் தெரியவந்ததாக இணை ஆணையர் தகவல் செங்கத்தில் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த

செங்கம், டிச. 10: செங்கத்தில் சுமார் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரிஷபேஸ்வரர் கோயிலில் இருப்பது அகத்திய முனிவரின் ஜீவ சமாதி தான் என ஆய்வில் தெரியவந்தது என்று இணை ஆணையர் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் சுமார் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயில் உள்ளது. மத்திய தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்று வரும் ஜனவரி மாதம் 28ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கோயில் உட்பிரகாரத்தில் ரிஷபேஸ்வரர் அனுபாம்பிகை, பாலசுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நவகிரகம் உட்பட பல்வேறு பிரகாரங்கள் உள்ளது.

அதேபோல் கோயில் நுழைவாயில் பகுதியில் பெரிய நந்தி பகவான் சன்னதி அமைந்துள்ளது. இதில் அனுபாம்பிகை அம்மன் மண்டப உட்பிரகாரத்தில் பல வடிவங்களான சிலைகள், வரலாற்று நூல்கள், ஆய்வு கட்டுரைகள், கல்வெட்டுகளில் இருப்பது கண்டறியப்பட்டு சென்னையில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்லியல் துறை வல்லுனர்கள் வந்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். கடந்த மாதம் 30ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிரகாஷ் கோயில் திருப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோயில் உட்பிரகாரத்தில் சித்தர் ஒருவரின் ஜீவசமாதி உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று செங்கம் வந்த இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பிரகாஷ் தினகரன் நிருபரிடம் கூறியதாவது: ‘ரிஷபேஸ்வரர் கோயிலில் உள்ள ஜீவசமாதி தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற அகத்திய முனிவரின் ஜீவ சமாதி தான் என்பது தற்போது உறுதியாகி உள்ளது. இது கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தப்படும்’ என்றார். தமிழகத்தில் பிரசித்திபெற்ற 18 சித்தர்களில் அகத்திய முனிவர் முதன்மையானவராகவும் சித்த மருத்துவத்தின் தந்தை என போற்றப்படுபவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.