கத்தியை காட்டி போலீசை மிரட்டிய வாலிபர் கைது நடுரோட்டில் ரகளை செய்து
செய்யாறு, டிச. 10: செய்யாறு அருகே நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டு, தட்டிக்கேட்ட போலீசுக்கு கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை காழியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர், நடுரோட்டில் கையில் கத்தியுடன் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அங்கு சென்று ரகளையில் ஈடுபட்டவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அதே கிராமத்தை சேர்ந்த சுஜிபர்(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து செல்லும்படி கூறினர். ஆனால், அவர் அங்கிருந்து செல்லாமல் கத்தியை காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் சுஜிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.