வந்தவாசி அருகே திருமணமானதை மறைத்து இன்ஸ்டா.காதலியை வரவழைத்து 1 சவரன் செயின், செல்போன் பறிப்பு கூட்டாளிகளுடன் நாடகமாடிய காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது
வந்தவாசி, ஆக.8: வந்தவாசி அருகே திருமணமானதை மறைத்து இன்ஸ்டாகிராம் காதலியை வரவழைத்து 1 சவரன் செயின், செல்போன் பறித்த காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் 40 வயது மாற்றுத்திறனாளி பெண். திருமணம் ஆகாத இவர், தனியார் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார்.
இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு குடோன் தெருவை சேர்ந்த தமிழரசன் (31) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தமிழரசனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் அதனை மறைத்து பேராசிரியைக்கு காதல் ஆசைவார்த்தை கூறி தனது வலையில் விழவைத்ததாக கூறப்படுகிறது. தமிழரசன், சென்னையில் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில் பேராசிரியையிடம் ஆசைவார்த்தை கூறியும், லோடு ஆட்டோ செலவுக்கு தேவைப்படுவதாக கூறியும் அடிக்கடி ஜிபே மூலம் பணம் பறித்து வந்துள்ளார். இதனிடையே கணவரின் கள்ளக்காதல் தெரியவந்ததால் தமிழரசின் மனைவி கண்டித்துள்ளார். இதில் விரக்தியடைந்த தமிழரசன் , கடந்த வாரம் சென்னையில் தூக்கு மாட்டி கொண்டார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.
இதுகுறித்து பேராசிரியையிடம் வீடியோ காலில் பேசிய தமிழரசன், உன்னால் தான் தூக்கு மாட்டிக்கொண்டேன் எனக்கூறியுள்ளார். இந்நிலையில் தமிழரசனை நேரடியாக சந்திக்க பேராசிரியை முயன்றார். அதற்கேற்ப வந்தவாசி வெண்குன்றம் மலையடிவார பகுதியில் இருவரும் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்றுமுன்தினம் அங்கு வந்த பேராசிரியையுடன், தமிழரசின் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் இருவரையும் மிரட்டி பேராசிரியையிடம் 1 சவரன் தங்கச்செயின் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.
இதுகுறித்து தமிழரசன் மற்றும் இன்ஸ்டாகிராம் காதலி இருவரும் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் தமிழரசன் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது செல்போனை எண்ணை ஆய்வு செய்தனர். இதையடுத்து பேராசிரியையிடம் நகை பறித்தத்தாக செய்யாறு எல்ஐசி நகரை சேர்ந்த அருண்குமார் (34), தொழுப்பேடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (31) மற்றும் குடோன் தெருவை சேர்ந்த சுந்தர் (42) என தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் அம்பலமானது.
தமிழரசனும், கைதான அருண்குமார் உள்ளிட்டோரும் நண்பர்கள் எனப்து தெரியவந்தது. தன்னிடம் பணம் இல்லாததால் தமிழரசன் போட்டுக்கொடுத்த திட்டத்தின்படி அவர்கள் மூவரும் பேராசிரியையிடம் கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் அருண்குமார் உள்ளிட்ட 3 பேர் மீதும் செய்யாறு காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து செயின் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக காதலியை ஏமாற்றி கொள்ளையடித்துவிட்டு போலீசிடம் நாடகமாடிய தமிழரசனையும் கைது செய்தனர். இச்சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



