Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

போலி வெப் அப்ளிகேஷன் பயன்படுத்தி வங்கி கணக்குகளை ‘ஹேக்' செய்து பணம் பறித்த ஆரணி வாலிபர் கைது: கிரிப்டோ மூலம் டாலராக மாற்றியது அம்பலம்

ஆரணி, ஆக.9: போலி வெப் அப்ளிகேஷன் பயன்படுத்தி வங்கி கணக்குகளை ‘ஹேக்’ செய்து பணம் பறித்து அதனை டாலாக மாற்றி வந்த ஆரணி வாலிபர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் போலி வெப் அப்ளிகேஷன் பயன்படுத்தி பணம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதேபோல், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் இணையவழி பண மோசடி செய்யும் கும்பல்கள் பொதுமக்களிடம் பணம் பறித்து வருகின்றனர். இதுகுறித்த புகார்களின்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், சைபர் குற்றத்தில் தொடர்புடைய நபர்களின் செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து கண்காணித்து, பணம் பறித்து மோசடி செய்த நபர்களை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் போலியாக வங்கி கணக்குகள் மூலம் மோசடி செய்யும் நபர் நடமாட்டம் இருப்பதாக சைபர் குற்றப்பிரிவு சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், எஸ்பி உதயகுமார் உத்தரவின்பேரில் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசி, எஸ்ஐ சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று ஆரணி பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் அருகே சந்தேக நபரை கண்காணித்து வந்தனர்.

அப்போது ஏடிஎம் அருகே பணம் எடுப்பதுபோல், சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ஆரணி டவுன் ஆரணிபாளையம் சத்யா நகரை சேர்ந்த முஷீர்ஷேக்(38) என்பதும், இவர், போலி வெப் அப்ளிகேஷன் பயன்படுத்தி பல நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி அவர்களது கணக்கில் பணத்தை அபகரித்து வந்ததும் ெதரியவந்தது.

மேலும், அந்த பணத்தை கிரிப்டோ ஐடிக்கு டாலராக மாற்றி சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததும் தெரியவந்தது. இதேபோல், நேற்று முன்தினம் பலரிடம் மோசடி செய்து பறித்த பணத்தை வங்கி ஏடிஎம்மில் இருந்து எடுக்க வந்தது தெரிந்தது. அவரை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைதான முஷீர்ஷேக், சில மாதங்களாக ஆன்லைன் மூலம் பொதுமக்களின் வங்கி கணக்குகளை ‘ஹேக்' செய்து, பல லட்சம் பணம் எடுத்திருப்பது தெரியவந்தது. அதேபோல் இவர் கோவை, பெங்களூரு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு நபர்களிடம் போலி வெப் அப்ளிகேஷன் பயன்படுத்தி வங்கி கணக்குகளை ஹேக் செய்து பணம் எடுத்ததும், அந்த பணத்தை சட்டவிரோதமாக கிரிப்டோ ஐடிக்கு டாலராக மாற்றியது தெரியவந்தது என தெரிவித்தனர்.