உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திருவண்ணாமலை வருகை; அண்ணாமலையாரை தரிசிக்கிறார்: பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்
திருவண்ணாமலை, ஆக.8: திருவண்ணாமலைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வருகை புரிந்து அண்ணாமலையாரை தரிசிக்கிறார். இதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வருகிறார். ஏற்கனவே வெளியான அவரது பயண திட்டத்தின் படி, திருவண்ணாமலைக்கு நாளை (9ம் தேதி) வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது பயண திட்டத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலைக்கு இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை வருகிறார். கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் ெஹலிபேட் மைதானத்தில் இருந்து, கார் மூலம் கிரிவலப் பாதை வழியாக ரமணாஸ்ரமம் செல்கிறார். அங்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்கும் அமைச்சர் அமித்ஷா, பின்னர் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகிறார்.
கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, திருவண்ணாமலையிலிருந்து கார் மூலம் புதுச்சேரிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து நாளை (9ம் தேதி) காலை 10.15 மணிக்கு புதுச்சேரி கோரிமேடு போலீஸ் கிரவுண்ட் பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா திருவண்ணாமலைக்கு இன்று வருவதை முன்னிட்டு, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திருவண்ணாமலையில் முகாமிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
மேலும், திருவண்ணாமலை எஸ்பி உதயகுமார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் நேற்று ரமணா ஆசிரமம் மற்றும் அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை பார்வையிட்டனர் மேலும், அமைச்சர் பயணம் மேற்கொள்ளும் ஹெலிகாப்டர் ஒத்திகையும் நேற்று நடந்தது. இதையொட்டி, அரசு கலைக்கல்லூரி மற்றும் அடி அண்ணாமலை பகுதிகளில் அமைந்துள்ள ஹெலிபேட் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர் காரில் பயணம் மேற்கொள்ளும் சாலைகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு, திருவண்ணாமலையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



