சேத்துப்பட்டு, ஆக.8: சேத்துப்பட்டு அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் கிராமத்தில் ஒரு பகுதியை சேர்ந்த 80 நபர்கள் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களாக உள்ளனர். தற்போது இவர்களில் 40 பேருக்கு மட்டுமே வேலை கிடைப்பதாகவும், அரசு நிர்ணயம் செய்த கூலியை வழங்காமல் குறைத்து வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஏற்கனவே 2 முறை சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆணையாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, நேற்று பெண் தொழிலாளர்கள் பலர் விளாப்பாக்கம் கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று சேத்துப்பட்டு- போளூர் நெடுஞ்சாலையில் கொம்மனந்தல் கூட்ரோடு பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போளூர் இன்ஸ்பெக்டர் அல்லிராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, ஆணையாளர் வேலு, பணி பார்வையாளர் ஜெயச்சந்திரன் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் எழில்மாறன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதையேற்று சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
+
Advertisement