வந்தவாசி, ஆக.8: வந்தவாசி அருகே புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைக்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வந்தவாசி அடுத்த கீழ்ப்பாக்கம்- கீழ்நர்மா சாலையில் உள்ள கொவளை கூட்ரோடில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. பொதுமக்களுக்கு இடையூறான இந்த கடையை மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் கீழ்ப்பாக்கம்- கீழ்கொடுங்காலூர் சாலையில் உள்ள காலியான கட்டிடத்தில் இடம் மாற்றம் செய்ய முடிவு செய்தனர். நேற்று முன்தினம் கொவளை கூட்ரோடு டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.
இதையறிந்த கீழ்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பாக அமர்ந்தனர். தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நேற்று போலீஸ் பாதுகாப்புடன் கீழ்ப்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள கடைக்கு மதுபாட்டில்களை கொண்டு வந்தனர். மேலும், மது போதை ஆசாமிகளால் இடையூறு ஏற்படாத வகையில் கடையின் இரு பகுதிகளிலும் வேலி அமைக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர்.