ஆரணி அருகே 12 ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நடக்கும்; கோயில் இடம் ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை கோரி மக்கள் மறியல்: ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
ஆரணி, ஆக. 5: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சியில் கிராம மக்களின் குலதெய்வமான பொன்னியம்மன் கோயிலுக்கு சொந்தமாக இரும்பேடு கூட்ரோடு ஆரணி-ஆற்காடு செல்லும் சாலையில் பொன்னியம்மன் எல்லைப்பாறை இடம் உள்ளது. இந்த இடத்தில் ஆடி மாதம் முழுவதும் வரும் செவ்வாய் கிழமையி கிராம மக்கள் எல்லை கல்லுக்கு பூஜைசெய்து வழிபட்டு, பின்னர் பொன்னியம்மனுக்கு காப்பு கட்டி 18 நாள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு திருவிழா நடத்தி வருகிறன்றனர்.
இந்நிலையில் இக்கோயிலுக்கு சொந்தமான இடம் மற்றும் எல்லைக்கல் அதனை சுற்றியுள்ள இடத்தினை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்து, தகர ஷீட் அமைத்து பழைய இரும்பு பொருள் வாங்கும் கடை வைத்துள்ளாராம். இதனால், கோயில் இடம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, இடத்தை மீட்டு தரவும், ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் கிராம மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், கிராம மக்கள் மிக விமர்சையாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொன்னியம்மன் கோயிலில் திருக்கல்யாணம், வரும் 19ம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெறவுள்ளது. இதனால், கிராம மக்கள் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரும்பேடு எல்லைக்கல் உள்ள இடத்தில் பூஜைசெய்து, வழிப்பட்டு காப்பு கட்டுவதற்காக கோயில் இடத்தினை ஜேசிபி மூலம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, கோயில் இடத்தை ஆக்கிமித்துள்ள நபர் அங்கு வந்து, இந்த இடம் எனக்கு சொந்தமானது என தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாசமாக திட்டியுள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென இரும்பேடு கூட்ரோடு பகுதியில் உள்ள ஆரணி- ஆற்காடு செல்லும் சாலையில் கோயில் இடத்தை ஆக்கிரமித்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மறியிலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தாலுகா இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தலைமையிலான போலீசார் மறியல் பேச்சு வார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்புகளை தாசில் தாரை வரவழைத்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதித்து பரபரப்பு ஏற்பட்டது.


