செங்கம், ஆக.5: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மேல் செங்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் பக்கிரிபாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கி நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். இதில் 1.5 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா கொண்டு வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி கிராமத்தை சேர்ந்த ரவீந்திரன்(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் யாருக்கு கஞ்சா விற்க முயன்றார். எங்கிருந்து கடத்தி வந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


