Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆரணி அருகே காதலியுடன் தகராறு; செங்கல் சூளை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

ஆரணி, ஜன.5: ஆரணி அருகே காதலியுடன் ஏற்பட்ட தகராறில் செங்கல் சூளை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆரணி அடுத்த கனிகிலுப்பை நகரை சேர்ந்தவர் அபினேஷ்(20). இவர் ஆரணியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்வதை நிறுத்திவிட்டு வீட்டின் அருகே உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அபினேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அவரது பெற்றோரும் கூலிவேலைக்கு சென்றுவிட்டனர். மாலை பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அபினேஷ் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆரணி தாலுகா ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அபினேஷ், கடந்த சில மாதங்களாக ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். தினமும் அந்த பெண்ணிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். அதேபோல் நேற்று முன்தினம் மாலை வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது அந்த பெண்ணிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அபினேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.