ஆரணி அருகே பயங்கரம்; கிணறு தோண்டியபோது மண்சரிந்து 2 தொழிலாளிகள் புதைந்து பலி: 2 பேர் மருத்துவமனையில் அனுமதி
ஆரணி, அக்.2: ஆரணி அருகே கிணறு தோண்டியபோது மண்சரிந்து 2 தொழிலாளிகள் புதைந்து பலியாகினர். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தஞ்சி(52). மாஜி ராணுவ வீரரான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அதேபகுதியில் 20 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக புதிய கிணறு தோண்டும் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணியில் களம்பூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மழையின் காரணமாக தஞ்சி 2 நாட்களாக கிணறு தோண்டும் பணிகளை நிறுத்தி வைத்திருந்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் மழையில்லாததால், நேற்று காலை மீண்டும் கிணறு தோண்டும் பணிகள் நடந்தது. இதற்காக கிணற்றில் உள்ள பாறைகளை வெடி வைத்து உடைக்க, கேளூர் பகுதியில் இருந்து துளையிடும் வண்டியை வரவழைத்துள்ளனர்.
தொடர்ந்து வெடி வைக்க துளையிடுவதற்கு கிணற்றில் இறங்கி சந்தவாசல் அடுத்த கருங்காலிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளிகள் செல்வமணி(36), ரவீந்திரன்(50) மற்றும் பாலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி(40), பாபு(35) ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சில தினங்களாக பெய்த தொடர்மழையின் காரணமாக கிணற்றின் கரைகள் சுற்றி ஈரப்பதம் அதிகமாக இருந்துள்ளது.
இதனால் பாறைகளில் துளையிட்டதில், அதிர்வு காரணமாக திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் கிணற்றில் வேலை செய்து கொண்டிருந்த செல்வமணி, ரவீந்தரன் ஆகியோரின் தலையின் மீது மண் விழுந்தது. இதில் இருவரும் புதைந்தனர். மேலும் தட்சிணாமூர்த்தி, பாபு ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு கிணற்றிலேயே மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிணற்றின் உரிமையாளர், துளையிடும் வாகன உரிமையாளர் மற்றும் அருகில் இருந்த விவசாயிகள் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தட்சிணாமூர்த்தி, பாபு ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி செல்வமணி, ரவீந்திரன் ஆகியோரை சடலங்களாக மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் ரேகாமதி மற்றும் களம்பூர் போலீசார் இறந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினர், உறவினர்கள் களம்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிணற்றின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து களம்பூர் போலீசில் செல்வமணியின் மனைவி கோட்டீஸ்வரி(33), கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணறு தோண்டும்போது மண்சரிந்து 2 தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


