தண்டராம்பட்டு, அக்.2: கிருஷ்ணகிரி அணையில் தண்ணீர் திறப்பு எதிரொலியாக சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 800 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 87.50 அடியாக உயர்ந்திருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அத்துடன் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 582 கனஅடியாக உள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், நேற்று முன்தினம் 49.85 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. இந்நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி மேற்கொண்டு வரும் தண்ணீர் முழுவதும், வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆறு செல்லும் 8 ஊராட்சிகளுக்கும், தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள், பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ நீர்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது.
இந்நிலையில் சாத்தனூர் அணை சுற்றுவட்டார நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. மேலும் கிருஷ்ணகிரி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி சாத்தனூர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 87.50 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் நேற்று முன்தினமும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், இரவு இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாத்தனூர் அணையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மழைமானியில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை நிலவரப்படி 124 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


