பள்ளிகொண்டா, நவ.2: பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்னால் பைக் மோதி வாலிபர் பலியானார். அப்போது போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த ரோந்து வாகன போலீஸ் ஏட்டு கார் மோதியதில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை பெங்களூரிலிருந்து வேலூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த செல்லபதி(38) என்பவர் ஓட்டி வந்துள்ளார். பள்ளிகொண்டா அருகே சின்ன கோவிந்தம்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த பைக் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே பைக்கில் வந்த ராணிப்பேட்டை, ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த அரி என்பவரின் மகன் சூர்யா(28) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் வாகனம் எண்.1ல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகலாதன், வாகன டிரைவர் லத்தேரி பகுதியை சேர்ந்த ஏட்டு ரவிச்சந்திரன்(51) ஆகியோர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சாலையில் தடுப்புகளை வைக்கும் பணியில் டிரைவர் ரவிச்சந்திரன் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கி வேகமாக வந்த கார் ரவிச்சந்திரன் மீது மோதியது. இதில் 15 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட ஏட்டு ரவிச்சந்திரன் கை, கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக ரவிச்சந்திரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பள்ளிகொண்டா போலீசார் லாரியின் பின்புறம் மோதி இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த ஏட்டு ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பலியானார். தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்திய லாரி டிரைவர் செல்லபதி, போலீஸ் மீது மோதி விபத்து ஏற்படுத்திய விரிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் மோகன வேலு ஆகியோரை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்து பள்ளிகொண்டா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


