Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை காப்புக்காடு பகுதியில் மான்களை வேட்டையாட முயன்றவர் கைது: 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்

திருவண்ணாமலை, ஜூலை 28: திருவண்ணாமலை அருகே திப்பக்காடு வனப்பகுதியில் மான்களை வேட்டையாட முயன்ற வாலிபரை கைது செய்தனர். 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை அருகேயுள்ள காப்புக்காடு பகுதிகளில், அனுமதியில்லாத நாட்டுத் துப்பாக்கியால் வன விலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதையொட்டி, வனச்சரகர் பிரசன்னகுமார் தலைமையில், வனவர்கள் ராஜேஷ், விவேக் ஆதித்யன் உள்ளிட்டோர் கொண்ட வனத்துறையினர் திருவண்ணாமலை அடுத்த திப்பக்காடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, திப்பக்காடு பகுதியில் நேற்று அதிகாலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட முயன்ற கும்பலை கண்டு விரட்டி சென்றனர். அப்போது, பைக்கில் தப்ப முயன்ற ஒருவர் மட்டும் சிக்கினார். 2 பேர் தப்பிவிட்டனர். சிக்கிய நபரிடம் நடத்திய விசாரணையில், கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திணேஷ்குமார்(30) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அனுமதியில்லாத இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தப்பியோடிய கழிக்குளம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்ராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.