Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாய கடன், இதர நலத்திட்டங்கள் பெற உழவர் அடையாள எண் அவசியம்: வேளாண் உதவி இயக்குனர் தகவல்

சேத்துப்பட்டு, மே 28: விவசாய கடன், இதர நலத்திட்டங்கள் பெற உழவர் அடையாள எண் அவசியம் என்று வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கான அனைத்து அரசு நலத்திட்டங்களையும் ஒரே பதிவின் மூலம் எளிதாக பெறும் வகையில், ‘விவசாய பதிவு’ எனும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நில ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும் பிரத்தியேக ‘உழவர் அடையாள எண்' வழங்கப்படுகிறது.

இதுகுறித்து சேத்துப்பட்டு வேளாண் உதவி இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: விவசாயிகள் தங்களின் நில சர்வே எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பிறகு, இந்த உழவர் அடையாள எண் (உழவர் அட்டை) வழங்கப்படும். இதன் மூலம், விவசாயிகள் ஒவ்வொரு முறையும் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இனிவரும் காலங்களில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேளாண் மானியங்கள், பயிர் காப்பீடு, விவசாய இடுபொருட்கள், பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவித்தொகை (பிஎம்- கிசான்), விவசாய கடன் மற்றும் இதர நலத்திட்டங்களை நேரடியாக பெற உழவர் அடையாள எண் மிகவும் அவசியமாகும்.

இதற்கு தேவைப்படும் ஆவணங்கள் ஆதார் எண் (கைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்). பட்டா (நிலச் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்ணுடன்) ஆகியவையாகும்.சேத்துப்பட்டு வட்டாரத்தில் இதுவரை இத்திட்டத்தில் இணையாமல் விடுபட்டுள்ள 2 ஆயிரத்து 703 விவசாயிகள், உடனடியாக தங்களின் நில ஆவணங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் அல்லது அருகிலுள்ள இ- சேவை மையங்களை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தற்போது தங்கள் பெயரில் நிலம் இல்லாத (சட்டப்பூர்வ வாரிசுதாரர்களாக உள்ள) விவசாயிகள், இத்திட்டத்தில் நேரடியாக பதிவு செய்ய இயலாது. எனவே, அத்தகைய விவசாயிகள் தங்களது சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை கொண்டு, பட்டா மாற்றம் செய்ய வருவாய்த்துறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான ஆவணங்களை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலரிடம் சமர்ப்பித்தால், அவை சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, விரைந்து பட்டா மாற்றம் செய்து இத்திட்டத்தில் பதிவு செய்ய வழிவகை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.