Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை மறுதினம் வைகாசி பவுர்ணமி கிரிவலம்: முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை, மே 28: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பவுர்ணமி முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வர இறுதி நாட்களில் திருவண்ணாமலை நகரில் ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர். எனவே, திருவிழா கோலமாக காணப்படுகிறது.

இந்நிலையில், கோடை விடுமுறை காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக உயர்ந்தது. அதன்படி, நேற்று அதிகாலை கோயிலில் நடை திறக்கும்போதே, தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அதையொட்டி, அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து மாட வீதி வரை நீண்டிருந்தது. காலை 10 மணிக்கு பிறகு பக்தர்களின் வருகை பல்லாயிரக்கணக்கில் அதிகரித்தது.

எனவே, பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. மேலும், பொது தரிசன வரிசை மட்டுமின்றி, ரூ.50 கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் மாதம்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது. அதன்படி, வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை மறுதினம் (30ம் தேதி) பகல் 12.59 மணிக்கு தொடங்கி, வரும் 31ம் தேதி பகல் 2.50 மணிக்கு நிறைவடைகிறது.

எனவே, நாளை மறுதினம் இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, கிரிவலம் பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று ஆய்வு நடத்தினார். அண்ணாமலையார் கோயில் உட்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரம், தேரடி வீதி, திருவூடல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற உத்தரவிட்டார். மேலும், தேரடி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்கள் இடையூறு இல்லாமல் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதேபோல், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் விரைந்து தரிசனம் செய்யும் வகையில் தரிசன வரிசையை முறைப்படுத்த உத்தரவிட்டார். அதேபோல், தற்காலிக பஸ் நிலையங்களில் மாநகராட்சி சார்பில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும், பக்தர்களின் தேவைகளை கருதி சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய முன்னுரிமை அடிப்படையில் தனி வரிசை ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், கோடைகாலம் என்பதால் தேவையான இடங்களில் குடிநீர் வசதி கூடுதலாக ஏற்பாடு செய்யவும், கோயில் உட்பிரகாரங்களில் உள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக தூய்மைப்படுத்தி குடிநீர் வசதி செய்யவும் உத்தரவிட்டார். அப்போது, டிஆர்ஓ ராம்பிரதீபன், கோயில் இணை ஆணையர் பரணிதரன், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகர்கள் உடனிருந்தனர்.