Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை தீபமலை பகுதியில் பட்டா இல்லாத 1,535 வீடுகளை ஒரு மாதத்துக்குள் அகற்ற நோட்டீஸ் விநியோகம்

திருவண்ணாமலை, ஆக.28: திருவண்ணாமலை தீப மலை பகுதியில், பட்டா இல்லாத 1535 வீடுகளை ஒரு மாதத்துக்குள் அகற்றிட வேண்டும் என வீடு வீடாக நோட்டீஸ் விநியோகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவண்ணாமலையில் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் பெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் தீபமலையின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, மலைப்பகுதியில் உள்ள வஉசி நகரில் 7 பேர் உயிரிழந்தனர். பல வீடுகள் சேதமடைந்தன. தொடர்ந்து மண் சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக புவியியல் வல்லுநர் குழு தமது ஆய்வு அறிக்கையில் எச்சரித்துள்ளது. மேலும் இந்த மலைப்பகுதி வசிப்பதற்கு உகந்த இடம் இல்லை எனவும், அடுத்தடுத்து கனமழை பெய்தால் மேலும் மண் சரிவும், பாறைகள் உருண்டு விழும் ஆபத்து இருப்பதாகவும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில், ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜ் தலைமையிலான குழு ஆய்வு நடத்தி வருகிறது. இதுவரை பல்வேறு கட்ட ஆய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை தீபமலை அமைந்துள்ள 718 ஏக்கர் பரப்பளவிலான மலைப் பகுதியில் பட்டா இல்லாமல் குடியிருக்கும் வீடுகள் தொடர்பாக கணக்கெடுப்பு பணியில் வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த ஆண்டு ஈடுபட்டனர். அதன்படி 1535 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பட்டா இல்லாமல் மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்தது. இந்நிலையில், மலைப்பகுதியில் உள்ள இந்த வீடுகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், திருவண்ணாமலை தீபமலை பகுதியில் உள்ள 1535 வீடுகளுக்கும் வருவாய்துறை மூலம் தற்போது நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் 30 நாட்களுக்குள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றிக் கொள்ள வேண்டும். தவறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அதோடு, இது தொடர்பான எச்சரிக்கை விளம்பர பதாகைகளும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதனால், மலைப்பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் 1535 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

அப்போது, திருவண்ணாமலை மலைப்பகுதி மற்றும் கிரிவலப் பாதை உள்ளிட்ட இடங்களில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றத்தின் உத்தரவுபடி இதுவரை மாவட்ட நிர்வாகத்தில் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், தீபமலைப் பகுதியில் வீடுகள் அகற்றப்படுவதற்கான நோட்டீஸ் விநியோகத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஓய்வு பெற்ற நீதிபதியிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

மண் சரிவால் பாதிப்பு இல்லாத மலைப் பகுதியில் வசிப்போரை வெளியேற்ற கூடாது, வசிப்பிடம் வேறு எதுவும் இல்லாமல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதியில் குடியிருப்பவருக்கு தொடர்ந்து வசிக்க கருணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் குடியிருக்கும் பெரும்பாலானோர் அன்றாட கூலித் தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தும் வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்கள் என்பதால், குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.