Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கலசபாக்கம் ஒன்றியத்தில் பரபரப்பு; பணித்தள பொறுப்பாளர் நியமனத்திற்கு ஆதரவாளர்களுடன் வந்த தவெகவினர்: விபிஜி ராம்ஜி திட்டத்தில்

கலசபாக்கம், ஆக. 26: கலசபாக்கம் ஒன்றியத்தில் விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய நேற்று தவெக ஆதரவாளர்களுடன் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை விபிஜ ராம்ஜி என ஜூலை 1ம் தேதி முதல் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தில் நீர் பாதுகாப்பு அடிப்படை, கிராம உட்கட்டமைப்பு வாழ்வாதார சொத்துக்கள் கால நிலை மாற்றத்தை தாங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 12,482 ஊராட்சிகளில் புதிய குளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 842 ஊராட்சிகளில் குளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை பணி மேற்பார்வையாளர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் பணிகளை கண்காணித்து வருகின்றனர். தினந்தோறும் அளவீடு பணிகள், தொழிலாளர்களின் வேலை அட்டை குறித்த தகவல் வருகை பதிவேடு தொழிலாளர்களின் வேலை தொடங்கும் முன்பு வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது கருவிகளை பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர் பணிபுரிய அதிக அளவில் தொழிலாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். பணித்தள பொறுப்பாளர் நியமிப்பதில் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தற்போது ஆட்சியில் உள்ள தவெக நிர்வாகிகள் தங்கள் ஆதரவாளர்களை பணித்தள பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. அதேபோல் ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் தொடர்ந்து நாங்கள் தான் பணி புரிய வேண்டும் என வலியுறுத்துவதால் பணித்தள பொறுப்பாளர்களை நியமிக்க முடியாமல் அதிகாரிகள் திணறிவருகின்றனர். பணித்தள பொறுப்பாளர்கள் குறைந்தது 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தி அதன் மூலம் வருகை பதிவேடு குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவர்களுக்கு விபிஜி ராம்ஜி திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கும் கூலி வழங்கப்படுகிறது. இவர்கள் தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அதிகாரிகள் சேர்ந்து இந்த திட்டத்தில் தொழிலாளர்களிடம் வேலை வாங்குவதால் அனைவருக்கும் கவுரவ பிரச்னை. ஆகையால் ஆளும் கட்சியை சேர்ந்த நபர்கள் பணித்தள பொறுப்பாளர் பணியில் ஈடுபட வேண்டும் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் தங்கள் ஆதரவாளர்களை பணித்தள பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் வேறு யாரையும் பணித்தள பொறுப்பாளராக நியமிக்க கூடாது, நீங்கள் கேட்கும் ஆவணங்கள் அனைத்தையும் விண்ணப்பத்துடன் வழங்குகிறோம், எனவே நாங்கள் வழங்கும் விண்ணப்பங்கள் படி பணித்தள பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக நிர்வாகிகள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று கலெக்டரின் ஆய்வுக்கூட்டம் என்பதால் முதல் நிலை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்திற்கு சென்று விட்டனர். ஆகையால் இரண்டாம் நிலையில் இருந்த அதிகாரிகள் பிரச்னைகளை சமாளித்தனர். தொடர்ந்து எந்த பதவியும் இல்லாமல் கட்சிப் பதவியை வைத்துக்கொண்டு அரசு அலுவலகங்களில் வந்து நிர்வாகத்தில் தலையிடுவதால் அதிகாரிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்.