செய்யாறு, ஆக. 28: செய்யாறு அருகே பிரியாணி ஆர்டர் செய்வதற்கு போன் செய்தபோது போன் எடுக்காததால் கடை சூறையாடப்பட்டது. ெதாடர்ந்து இருதரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(47). இவர் அருகே உள்ள புதூர் பகுதியில் பிரியாணி கடை வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் பிரம்மதேசத்தை சேர்ந்த முனிசாமி(48) என்பவர் பிரியாணி ஆர்டர் செய்வதற்காக பெருமாளுக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த முனுசாமி, பிரியாணி கடைக்கு சென்று ‘போன் செய்தால் எடுக்கமாட்டாயா?’ எனக்கேட்டு பெருமாளிடம் தகராறு செய்துள்ளார்.
இதில் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முனுசாமி, அவரது ஆதரவாளர் மணிகண்டன், பிரபாகரன், வெங்கடேஷ் ஆகியோர் பெருமாளை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் சிக்கன் பக்கோடா பொரிப்பதற்காக வைத்திருந்த சூடான எண்ணெய்யை எடுத்து பெருமாள் மீது ஊற்ற முயன்று பிரியாணி கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள், முனிசாமியை சரமாரி தாக்கினாராம். இதுகுறித்து பெருமாள், முனிசாமி இருவரும் பிரம்மதேசம் போலீசில் தனித்தனியே புகார் அளிக்க வந்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. முனிசாமி, அவரது ஆதரவாளர்கள் சவுந்தர், ஆனந்தன், பிரபாகரன் ஆகியோர் பெருமாளை சரமாரி தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
பதிலுக்கு பெருமாள், அவரது மகன் சக்தி ஆகியோர் முனிசாமியின் ஆதரவாளர் சவுந்தரை தாக்கினார்களாம். இதைபார்த்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அப்போது தகராறில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை எஸ்பி உதயகுமார், டிஎஸ்பி மீனாட்சிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பெருமாள், முனிசாமி, சவுந்தர் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



