திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: 5 மணிநேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம்
திருவண்ணாமலை, ஆக. 28: திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் 5 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் பக்தர்கள் அவதிபட்டனர். நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் அக்னித்தலமாகவும் அமைந்திருக்கிறது அண்ணாமலையார் திருக்கோயில். அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக இறைவன் எழுந்தருளிய திருத்தலம் என்பதால், இங்குள்ள மலையே மகேசனாக காட்சியளிக்கிறது. அதனால், மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் இறைவன் திருவடிவாக திகழும் கிரியை வலம் வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். பவுர்ணமி நாட்களில் கிரிவலம் சென்று வழிபடுவதால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து அதிகாலை 5 மணி முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நடை அடைப்பு இல்லாமல், இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் வழியாக சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால், கோயில் வெளி பிரகாரத்தில் தேரடி வீதி, பெரிய தெரு வரை தரிசன வரிசை நீண்டிருந்தது.
அதனால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. சுமார் 14 கி.மீ தூரம் நடந்து கிரிவலம் முடித்துவிட்டு, மீண்டும் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்ததால், பக்தர்கள் பெரிதும் அவதிபட்டனர். தேரடி வீதியில் வரிசையில் காத்திருந்த பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று காலை 9.53 மணிக்கு தொடங்கி, இன்று காலை 10.29 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இரவு முழுவதும் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ தொலைவும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க சன்னதிகள், இடுக்கு பிள்ளையார் கோயில் உள்ளிட்ட சன்னதிகளை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவல பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் வழக்கம்போல ேமார், குடிநீர், அன்னதானம் வழங்கப்பட்டன. மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக சுமார் 1200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல் வேலூர்- திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதையொட்டி, நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கவில்லை. எனவே, நகருக்கு வெளியே சாலையோரங்களில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று காலை 10.29 மணி வரை அமைந்திருப்பதால், பக்தர்கள் வருகை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவுர்ணமியை முன்னிட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.



