Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வை 7742 பேர் எழுதுகின்றனர்: முன்னேற்பாடுகளை கலெக்டர் வந்தனா கார்க் ஆய்வு

திருவண்ணாமலை, ஜூன் 26: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், அரசு, அரச நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு அடுத்த மாதம் 4ம் தேதி மற்றும் 5ம் தேதிகளில் நடத்துகிறது. அதன்படி, இடை நிலை ஆசிரியர்களுக்கான தாள் 1 தகுதித் தேர்வு 4ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 தகுதித் தேர்வு 5ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கான நுழைவுச் சீட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதனை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இநநிலையில், தேர்வு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் வந்தனா கார்க் தலைமையில் நடந்தது. அப்போது, தேர்வு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேர்வு அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்துதல், தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி, வினாத்தாள், விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டுசெல்ல வழித்தட அலுவலர்கள் நியமனம் உள்ளிட்டவைகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு வரும் 4ம் தேதி மற்றும் 5ம் தேதிகளில் 28 மையங்களில் நடக்கிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1 தேர்வை 1999 ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 தேர்வை 5743 ஆசிரியர்களும் எழுத விண்ணப்பித்துள்ளனர். அதில், 182 மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தேர்வு மையங்களில் தேவையான குடிநீர் வசதி மற்றும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்து துறை சார்பில் தேர்வு மையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்லும் வகையில் பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். காவல்துறை சார்பில் 28 தேர்வு மையங்களிலும், 8 வழித்தடங்களிலும் பாதுகாப்பு வசதிக்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும், மருத்துவத்துறை சார்பில் தேர்வு மையங்களில் அவசர கால ஊர்தி மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மின்சார துறை சார்பில் தேர்வு நாட்களில் 28 மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தடுப்பு உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள் கொண்ட மீட்பு குழு தயார் நிலையில் இருக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வுக் கூட்டத்தில், டிஆர்ஓ ராம்பிரதீபன், முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ், கலெக்டரின் நேர்முக உதவியார்(பொது) ராமகிருஷ்ணன் உளபட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.