Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரணி அடுத்த சிறுமூர் கிராமத்தில் செங்கல் சூளையில் குழந்தைகள் உட்பட்ட 19 பேர் கொத்தடிமைகள் மீட்பு: சூளை உரிமையாளருக்கு போலீஸ் வலை

ஆரணி, மே 20: ஆரணி அடுத்த சிறுமூர் கிராமத்தில் சுந்தரம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இந்த சூளையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து குறைந்த கூலி, விடுமுறை ஏதும் வழங்காமல் நடத்தப்பட்டு வருவதாக திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான விஜயலட்சுமி தலைமையில் 9 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் சிறுமூர் கிராமத்தில் இயங்கி வந்த செங்கல் சூளையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வேலை செய்து வந்த தொழிலாளர்களிடம் அவர்களின் சொந்த ஊர், வேலையின் விவரம், கூலி, தொழிலாளர்களை எப்படி இங்கு அழைத்து வந்து வேலைக்கு அமர்த்தினர் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்த சேகர் அவரது மனைவி குமாரி, திருவண்ணாமலை மாவட்டம் பெரியகொழப்பலூர் அருகேயுள்ள காட்டேரி சமத்துவபுரத்தை சேர்ந்தவர்கள் சின்னராசு இவரது மனைவி அமுதா மற்றும் ரவி மனைவி தேவி, ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த நேத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த கலையரசன் இவரது மனைவி முத்தம்மாள் என 6 குடும்பங்கள் மற்றும் 6 குழந்தைகள் என 19 நபர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் விஜய லட்சுமி, சட்டபணிகள் குழுவின் பேனல் வழக்கறிஞர் பாபு, ஆரணி டிஎஸ்பி சுரேஷ் சண்முகம் தாசில்தார் அகத்தீஸ்வரன், தொழிலாளர் நலத்துறை அலுவலர் அத்திப்பழம், சமுக நலத்துறை அலுவலர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் அவர்களை மீட்டு ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓவிடம் ஒப்படைத்தனர்.

அப்போது ஆர்டிஓ சிவா மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டதில், சூளை உரிமையாளரிடம் முன் பணமாக குறைந்தளவு பணம் பெற்றுகொண்டு கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்து வந்ததும், அவர்களுக்கு தினமும் கூலி குறைவாக வழங்கி விடுமுறை கூடவழங்காமல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை வாங்கி வந்தது உறுதியானது. இதுகுறித்து, தாசில்தார் அகத்தீஸ்வரன் ஆரணி தாலுகா போலீசில் 19 பேரை சூளையில் கொத்தடிமைகளாக வைத்திருந்த சூளை உரிமையாளர் சுந்தரம் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், கொத்தடிமைகளாக மீட்கப்பட்ட அவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டது. மேலும், அவர்களை மறுவாழ்வு முகாம்கள் மற்றும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.