அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: 4 மணிநேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம்: வாரவிடுமுறை நாளான நேற்று
திருவண்ணாமலை, ஆக.17: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வார இறுதி விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 4 மணிநேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நினைக்க முக்தித்தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அரசு விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் விழாக்காலம் போல பக்தர்கள் தரிசனத்துக்காக குவிகின்றனர். அதனால், ஒவ்வொரு வார இறுதி நாட்களும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகிவிட்டது. நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் தரிசனத்துக்காக வருகை தருகின்றனர். அதன்படி, வார இறுதி விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கும்போதே தரிசன வரிசையில் கூட்டம் காத்திருந்தது. பின்னர், காலை 9 மணிக்கு பிறகு படிப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.




