Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆசிரியர் உள்பட 2 பேர் வீட்டில் 21 சவரன் திருட்டு: மர்ம ஆசாமிகளுக்கு வலை

ஆரணி, ஜூலை 17: ஆரணியில் ஆசிரியர் வீடு உள்பட 2 பேரின் வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 21 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை அண்ணா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(44). வடமாதிமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோமதி(40). வாழப்பந்தல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஊழியராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது வீட்டின் மேல் மாடியில் பாலசந்தர்(32) என்பவர் தனது மனைவியுடன் வாடகைக்கு வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை பாலசந்தர் தனது வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் ைவத்திருந்த ஒரு சவரன் நகையை காணவில்லையாம். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பாலசந்தர், இதுகுறித்து வீட்டின் உரிமையாளரான மணிகண்டன், கோமதி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கோமதி, தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகைகள் உள்ளதா என பார்த்துள்ளார். அப்போது அவர் வைத்திருந்த 20 சவரன் நகைகளும் திருட்டு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து மணிகண்டன் ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் மணிகண்டன், பாலசந்தர் வீடுகளின் பூட்டு மற்றும் பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை. 2 வீடுகளில் வசிப்பவர்களும் தினமும் வீடுகளை பூட்டிவிட்டு, சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு வேலைக்கு சென்று வந்துள்ளனர். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், சாவியை எடுத்து, பூட்டை திறந்து வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.