Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சதுர அடி கணக்கில் மதிப்பீடு செய்ய வேண்டும்; புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி கருத்துக்கேட்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை, ஜூலை 16: திருவண்ணாமலை அருகே புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு நிலம் எடுக்கும் பணிக்காக கருத்துக் கேட்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். திருவண்ணாமலை அருகே மங்களூர்- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் பணிக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அதன்படி ஆடையூர், அடி அண்ணாமலை, நல்லான்பிள்ளை பெற்றான், கீழ்நாத்தூர், மேலத்திக்கான், அத்தியந்தல், முனியந்தல், சீலப்பந்தல், இனாம்காரியந்தல், வெளுக்கனந்தல் ஆகிய 11 கிராமங்களில் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதையொட்டி நிலம் கையகப்படுத்த உத்தேசித்துள்ள பரப்பளவு, நில உரிமையாளர், வழிகாட்டி மதிப்பு உள்ளிட்ட விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் வந்தனா கார்க் தலைமையில் நடந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டது. மேலும், அதற்காக, அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர்.

ஆனால் விவசாயிகள் தரப்பில் அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். மேலும் தற்போது நிலம் கையகப்படுத்தும் நிலத்துக்கு அருகே சாலை வசதி, குடியிருப்புகள், பள்ளி, மருத்துவமனை போன்ற கட்டமைப்புகள் உள்ளன. அதோடு, சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே சந்தை மதிப்பு தற்போது இப்பகுதிகளில் அதிகம். ஆனால் அரசின் வழிகாட்டு மதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. எனவே விவசாயிகளுக்கு அரசு வழங்க உத்தேசித்துள்ள வழிகாட்டு மதிப்பீடு நியாமற்றது. மேலும் சென்ட் கணக்கில் இழப்பீடு மதிப்பிடப்படுவது விவசாயிகளை பாதிக்கும்.

எனவே சதுர அடி அடிப்படையில் சந்தை மதிப்பை கணக்கிட்டு, இழப்பீடு கொடுத்தால் மட்டுமே நிலத்தை ஒப்படைப்போம் என விவசாயிகள் தெரிவித்தனர். அதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் சென்ட் மதிப்பில்தான் கணக்கிட முடியும் என அளித்த விளக்கத்தை விவசாயிகள் ஏற்க மறுத்தனர். அதைத்தொடர்ந்து, கருத்துக் கேட்பு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். மேலும், இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை மறுபரிசீலனை செய்யாவிட்டால், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட திட்டமிடுவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது.