சேத்துப்பட்டில் வீடியோ வைரலால் பரபரப்பு; கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்ற தவெக பிரமுகர்: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு
திருவண்ணாமலை, ஜூன் 16: சேத்துப்பட்டில் கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்ற தவெக பிரமுகரை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டையை சேர்ந்த தர்மராஜ் மகன் யோகேஸ்வரன்(20). டிப்ளமோ பார்மசி படித்துள்ள ேயாகேஸ்வரன் தவெகவில் பிரமுகராக உள்ளார். இவர் நேற்றுமுன்தினம் அதிகாலையில் வீட்டின் அருகே உள்ள ஒரு பகுதிக்கு காலை கடன் கழிக்க சென்ற கார் டிரைவரின் கர்ப்பிணி மனைவியை(25) பலாத்காரம் ெசய்ய முயன்றாராம். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணி கத்தி கதறிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி கணவரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த கணவர் மற்றும் அவரது உறவினர்கள் பைக்கில் சென்று யோகேஸ்வரனை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
அப்போது பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் யோகேஸ்வரனுக்கு தர்ம அடி கொடுத்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சேத்துப்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேலு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து யோகேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போளூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் யோகேஸ்வரனை பாதிக்கப்பட்ட பெண் தாக்கும் வீடியோ மற்றும் தவெக தண்ணீர் பந்தல் மாவட்ட செயலாளர் சத்யா திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் யோகேஸ்வரன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
