Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மோத்தக்கல் ஊராட்சியில் காட்டு பன்றிகளால் சேதம் அடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு

கண்ணமங்கலம், ஜூலை 15: வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட மோத்தக்கல் ஊராட்சியில் உள்ள இடி விழுந்தான் மலை அடிவாரப் பகுதியில் காசிமா நகர், அருணகிரிப்பேட்டை, மோத்தக்கல், பூசிமலைக்குப்பம் சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், இரவு நேரங்களில் மலைப்பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக காட்டுப் பன்றிகள் வயல்களுக்குள் புகுந்து பயிர்களை மிதித்து நாசப்படுத்தி வருகின்றன. எனவே கணியம்பாடி வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்து, காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பயிர் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்த விரிவான செய்தி, கடந்த 11ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது. இதனை தொடர்ந்து வருவாய்த் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, சேதமடைந்த பயிர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமும் அதிகாரிகள் குறைகளை கேட்டறிந்தனர். காட்டு விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அரசின் விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது வேலூர் வனச்சரகர், உதவி வேளாண் அலுவலர் மகேஷ், வனவர் பாரதி, வனக்காப்பாளர் சரத், விவசாயிகள் உடனிருந்தனர்.