Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை புதிய பஸ் நிலையம் அருகே ரயில் பாதையை கடந்து செல்ல நடை மேம்பாலம்; அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் முடிக்க ஏற்பாடு: கலெக்டர் வந்தனா கார்க் நேரடி ஆய்வு

திருவண்ணாமலை, ஜூலை 15: திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ரயில் பாதையை கடந்து செல்ல அமைக்கப்படும் நடை மேம்பாலம் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். தென்னகத்தின் புகழ்மிக்க ஆன்மிக நகரம் திருவண்ணாமலை. எனவே நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஆன்மிக பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். எனவே 24 மணிநேரமும் பரபரப்பாக இயங்கும் நகராக திருவண்ணாமலை மாறியிருக்கிறது.எனவே வேகமாக வளர்ச்சி பெறும் இந்நகரின் எதிர்கால நலனை கருதியும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாகவும் நகரையொட்டி கடந்த திமுக ஆட்சியில் திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையம், கடந்த ஜனவரி 13ம் தேதி முதல் பயன்பாட்டில் உள்ளன.

ஆனாலும் புதிய பஸ் நிலையத்தில் இரண்டாம் கட்ட விரிவாக்கப்பணிகள் நிலுவையில் இருந்ததால், பழைய பஸ் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட சில வழித்தடங்களுக்கான பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது. இந்நிலையில் புதிய பஸ் நிலையத்தில் விரிவாக்கப்பணிகள் நிறைவு பெற்றதால், கடந்த 13ம் தேதி முதல் முழுமையாக செயல்படுகிறது. அனைத்து புறநகர் பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படுகிறது,இந்நிலையில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நகருக்குள் வந்து செல்ல வசதியாக ரயில்வே பாதையின் குறுக்கே நடை மேம்பாலம் அமைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வந்தன. பயணிகள் வசதிக்காக ரயில் பாதையின் குறுக்கே 7 மீட்டர் உயரம் மற்றும் 30 மீட்டர் நீளத்தில் நடைமேம்பாலம், நகரும் நடைமேடை, மின் தூக்கி (லிப்ட்) ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து அமைக்கப்படுகிறது.

ஆனால், ஆட்சி மாற்றத்தின் காரணமாக, இப்பணிகள் தற்போது கைவிடப்பட்ட நிலையில் அந்தரத்தில் கேள்விக்குறியாக நிற்கிறது. ஆனால் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால், இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது. எனவே ஆபத்தான நிலையில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது புதிய பஸ் நிலையம் முழுமையாக செயல்பட தொடங்கியதால் இப்பணியை முழு வீச்சில் நிறைவேற்றி முடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வலுத்துள்ளது. எனவே மீண்டும் இப்பணிகள் முழு வீச்சில் மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் ரயில் பாதையின் குறுக்கே நடை மேம்பாலம் அமைக்கும் பணியை, கலெக்டர் வந்தனா கார்க் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது நடை மேம்பாலத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெறுவதாக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் தரப்பில் விளக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பு மற்றும் தேவை கருதி இப்பணிகளை அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் இப்பணிக்கு தனி கவனம் செலுத்தி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.