Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை உருவாகும்; நந்தன் கால்வாய் திட்டத்துக்கு நிலம் வழங்க எதிர்ப்பு: கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை, ஆக.7: நந்தன் கால்வாய் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தினால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவித்து நிலத்தை வழங்க மறுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாய பாசனத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது நந்தன் கால்வாய் திட்டம். சாத்தனூர் அணையில் இருந்து பாசன கால்வாய் அமைத்து, விளைநிலங்களுக்கு நீரினை கொண்டு சேர்க்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

அதன் முதற்கட்டமாக, நந்தன் கால்வாய் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த ரூ.42.69 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், சாத்தனூர் அணையில் இருந்து நந்தன் கால்வாய் அமையும் வழித்தடங்களில் உள்ள செ.அகரம், பெரும்பாக்கம், பாச்சல், உச்சிமலைக்குப்பம், கண்ணக்குறுக்கை, சாத்தனூர், மேல்சிறுபாக்கம், கொழுந்தம்பட்டு, மேல்பென்னாத்தூர், விண்ணவனூர், பீமானந்தல், சொர்ப்பனந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலம் கையகப்படுத்த கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், கையகப்படுத்தப்படும் நிலத்துக்கான இழப்பீடு மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013ன் அடிப்படையில் வழங்கப்படும் எனவும், ஆட்சேபம் இருந்தால் சம்மந்தப்பட்ட நில உரிமையாளர்கள் இத்திட்டத்துக்கான சிறப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நிலம் வழங்க ஆட்சேபம் தெரிவித்த விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம், திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், ஆட்சேப மனு அளித்த அனைத்து விவசாயிகளையும் அழைக்காமல், குறிப்பிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளை மட்டும் தனித்தனியே அழைத்ததாக கூறப்படுகிறது. எனவே, நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்படும் 15 கிராம விவசாயிகளும் நேற்று திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகத்தில் திரண்டனர். அதோடு, கருத்துக் கேட்பு கூட்டத்ைதயும் புறக்கணித்தனர். மேலும், தங்களுடைய வாழ்வாதாரமாக உள்ள விளை நிலங்களை இழந்துவிட்டால், பிழைப்புக்கு வேறு வழியில்லை. எனவே, நந்தன் கால்வாய் திட்டத்துக்காக நிலத்தை வழங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முழக்கமிட்டனர். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதோடு, தற்போதுள்ள சந்தை மதிப்புக்கும், அரசு வழிகாட்டி மதிப்புக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதால், அரசு வழங்கம் இழப்பீடு நியாயமானதாக இருக்காது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாதிக்கப்படும் விவசாயிகள் மறு ஆய்வுக்கு உட்படுத்த கோரும் மனுவை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், ஆர்டிஓ அலுவலகத்தில் மனு அளித்தனர்.