லடாக்கில் இந்திய- சீன எல்லையில் பாதுகாப்பு பணியின்போது ராணுவ அக்னி வீரர் உயிரிழப்பு: சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு
கண்ணமங்கலம், ஆக. 7: லடாக்கில் இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ராணுவ வீரர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு சொந்த ஊரில் முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகன் நந்தா(23). இவர் இந்திய ராணுவத்தில் அக்னிவீரராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் நந்தா உட்பட 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் லடாக்கில் உள்ள இந்திய- சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடும் பனிப்பொழிவு மற்றும் சவாலான வானிலை நிலவும் அந்தப் பகுதியில் பணியில் இருந்தபோது, வீரர் நந்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாக லடாக்கில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ராணுவ வீரர் நந்தா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது எதிர்பாராத மறைவு குறித்த தகவலை ராணுவ அதிகாரிகள் உடனடியாக அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்தனர். இந்தத் துயரச் செய்தியைக் கேட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கல்வாசல் கிராம மக்கள் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர். கிராமமே கண்ணீரில் மூழ்கியது. இதையடுத்து, லடாக்கில் இருந்து ராணுவ வீரர் நந்தாவின் உடல் நேற்று சிறப்பு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.
பின்னர், அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான கல்வாசல் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலைக் கண்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போர் நெஞ்சை உலுக்கியது. முன்னதாக, படவேடு முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில், மறைந்த ராணுவ வீரர் நந்தாவின் திருவுருவப் படத்துடன் கிராமத்தில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு முன்னாள் ராணுவத்தினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் வளையம் வைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், ராணுவ அதிகாரிகள் மற்றும் சக வீரர்கள் முன்னிலையில், 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் வீரர் நந்தாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்காகச் சென்று, இளம் வயதில் இன்னுயிரை நீத்த ராணுவ வீரரின் மரணம், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



