பள்ளி வளாகத்தில் பீடி பிடித்ததை தலைமை ஆசிரியை கண்டிப்பு; பிபி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற 3 மாணவிகள்: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
செங்கம், ஆக. 7: பீடி பிடித்ததை தலைமை ஆசிரியை கண்டித்ததால் நேற்று பள்ளியில் பிபி மாத்திரைகளை சாப்பிட்டு 3 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல்பள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 400 மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த வாரம் பள்ளி வளாகத்தில் மறைந்தபடி பிளஸ் 2 மாணவிகள் 2பேரும், 10ம் வகுப்பு மாணவி என 3 மாணவிகள் பீடி பிடித்ததாக தலைமை ஆசிரியர் ராணிக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்த தலைமை ஆசிரியை, மாணவியரின் நடவடிக்கை செயல்பாடுகள் மற்ற மாணவிகளை பெரிதும் பாதிக்கும். எனவே இந்த 3 மாணவிகளையும் மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொண்டு அவர்களை இந்த பள்ளியை விட்டு அழைத்துச் செல்லுமாறு பள்ளி தலைமையாசிரியர் ராணி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர்கள் ஆசிரியர்களிடமும் பள்ளி தலைமை ஆசிரியரிடமும் எங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லி ஒழுக்கமாகவும் பள்ளி பாடங்களை படிக்கவும் நாங்கள் அறிவுரை கூறி அனுப்பி வைக்கிறோம், இனி இதுபோன்ற தவறு ஏற்படாது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இனி தவறு நடந்தால் நாங்கள் முழு பொறுப்பேற்கிறோம் என உறுதி அளித்து சமரசம் செய்து பள்ளியில் இருந்து சென்றனர். அதன்பிறகு வழக்கம்போல பள்ளிக்கு வந்த 3 மாணவிகளும் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாக இந்த மாணவிகளில் ஒருவர், தனது தந்தை வீட்டில் வைத்திருந்த ரத்த அழுத்த மாத்திரைகளை நேற்று பள்ளிக்குக் கொண்டு வந்துள்ளார். பின்னர் பள்ளி வளாகத்திேலயே இந்த மாத்திரைகளை 3 மாணவிகளும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுள்ளனர். இந்த தகவலை சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளனர்.
மாத்திரைகளை சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் மாணவிகளுக்குத் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி தலைமை ஆசிரியை ராணி மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளை உடனடியாக மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையே மாணவிகளின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறி மருத்துவமனைக்கு வரவழைத்தனர். பின்னர் மாணவிகள் மூவரையும் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



