Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாட்டுவண்டிகளை ஜீப்பில் கட்டி 8 கி.மீ. தூரம் இழுத்து சென்ற போலீசார்

செங்கம், ஜூன் 6: செய்யாற்றில் மணல் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட 3 மாட்டு வண்டிகளை போலீசார் ஜீப்பில் கட்டி காவல் நிலையம் இழுத்து சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டகுளம் செய்யாற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக செங்கம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செய்யாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்திக்கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதைதொடர்ந்து கடத்தலுக்கு பயண்படுத்தப்பட்ட 3 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 3 மாட்டு வண்டிகளையும் மணலுடன் செங்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால் எவ்வித உதவிகளும் கிடைக்காத நிலையில், மாட்டு வண்டிகளில் நிரப்பப்பட்ட மணல்களை போலீசார் ஆற்றில் கொட்டினர். பின்னர் 3 காலி மாட்டு வண்டிகளையும் போலீஸ் ஜீப்பில் கயிறு மூலம் ஒன்றன்பின் ஒன்றாக கட்டி சுமார் 8 கிலோ மீட்டர் தூரமுள்ள காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.