Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செய்யாறு அருகே அப்துல்லாபுரம் கிராமத்தில் உயரழுத்த மின்கம்பிகள் உரசி 75 வீடுகளில் மீட்டர்கள் கருகியது

செய்யாறு, ஜூன் 6: வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தில் உயரழுத்த மின்கம்பிகள் உரசியதால் மின்னழுத்தம் ஏற்பட்டு வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது. செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமம் ராஜிவ்காந்தி நகரில் உள்ள 11 தெருக்களில் 150க்கும் மேற்பட்ட வீடுகளில் 750க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை மாரியம்மன் கோயில் அருகே குடியிருப்பு பகுதி வழியாக செல்லும் அதிக மின் அழுத்தம் கொண்ட மின் கம்பிகள் திடீரென ஒன்றோடு ஒன்றாக உரசிக் கொண்டதாக தெரிகிறது. அப்போது அதிக மின்னழுத்தம் கொண்ட மின்கம்பிகள் குடியிருப்புகளுக்கு செல்லும் மின் கம்பிகள் மீது விழுந்தது.

இதன் காரணமாக வீடுகளில் மின் அழுத்தம் அதிகமாகியது. இதனால் 75க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் மீட்டர்கள் தீப்பற்றி எரிந்தது. மேலும், பலரது வீடுகளில் இருந்த இன்வெர்ட்டர், பேன், ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் உள்ளிட்ட வீட்டு மின் உபயோகப் பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. சேதம் அடைந்த பொருட்களின் மதிப்பு பல லட்சங்கள் தாண்டும் என கூறப்படுகிறது. இந்த மின் விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து 3வது முறையாக பாதிப்பு;

அப்துல்லாபுரம் கிராமம் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் கடந்த 2 வருடங்களில் தொடர்ந்து 3வது முறையாக, உயரழுத்த மின்கம்பிகள் உரசிக்கொண்டதில் பலரது வீடுகளில் மின் மீட்டர், எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல ஆயிரக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருவது தொடர் கதையாக உள்ளதால், குடியிருப்பு வாசிகள் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் உயரழுத்த மின்கம்பிகள் தனிப்பாதையிலும், வீட்டு மின் இணைப்புக்கு செல்லும் மின் ஒயர்களை தனிப்பாதையிலும் மாற்றி அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.