Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சுட்டெரிக்கும் வெயிலில் நெற்பயிரை பாதுகாப்படி எப்படி? வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்

சேத்துப்பட்டு, மே 6–: சுட்டெரிக்கும் வெயிலில் நெற்பயிர்களில் மகசூல் குறைந்து வருகிறது. அதனைத் தணிக்கும் மேலாண்மை முறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சேத்துப்பட்டு வேளாண் உதவி இயக்குனர் பெரியசாமி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

நெற்பயிரில் ஏற்படும் வெப்பத் தாக்கத்தை குறைத்து, பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை பாதுகாக்க இலைவழி தெளிப்பு முறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 3 முதல் 5 சதவீதம் கயோலின் கரைசல் அல்லது 1 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை பயிரின் தூர் கட்டும், கதிர் உருவாகும் மற்றும் பூக்கும் பருவங்களில் தெளிக்க வேண்டும். இதனால் இலைகளின் வெப்பநிலை குறைந்து, ஒளிச்சேர்க்கை திறன் மேம்படும். மேலும் 1 சதவீதம் பொட்டாசியம் குளோரைடுடன் 500 பிபிஎம் சைக்கோசெல் கலந்து தெளிப்பதன் மூலம் பயிரின் வறட்சி எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

பிபிஎப்எம் எனப்படும் நுண்ணுயிர் உரத்தை பயன்படுத்துவதும் பயனளிக்கும். விதை நேர்த்திக்காக 5 கிலோ விதைக்கு 200 கிராம் அளவில் பயன்படுத்தலாம். மண்ணில் எக்டருக்கு 2 கிலோ அளவில் இடலாம். மேலும், 1 சதவீத கரைசலாக இலை வழியாக தெளிப்பதும் பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். தானிய எடையை அதிகரிக்க, 2 சதவீதம் மோனோ அமோனியம் பாஸ்பேட் மற்றும் 1 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கலவையை பூப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பும், பூக்கும் தருணத்திலும் தெளிக்க வேண்டும். அதிக வெப்ப நிலையை சமாளிக்க வயலில் தேவையான ஈரப்பதத்தை பராமரிப்பது அவசியம். நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் முறையான நீர் மேலாண்மையை பின்பற்ற வேண்டும்.

மேலும் துத்தநாக சத்து குறைபாட்டை தவிர்க்க எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட்டை மண்ணில் இடலாம் அல்லது 0.5 சதவீதம் கரைசலாக இலை வழியாக தெளிக்கலாம். கரைசல்களை அதிகாலை அல்லது மாலை நேரங்களில் தெளிப்பது சிறந்தது. அதிக உப்புத்தன்மை கொண்ட நீரைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.