திருவண்ணாமலை, நவ. 5: திருவண்ணாமலை கோட்ட பட்டாசு வணிகர்கள் சங்கத்தின் சார்பில் சங்க நிர்வாகிகள் ராஜகேசர், மண்ணுலிங்கம், சேட்டு உள்ளிட்டோர், திருவண்ணாமலை ஆர்டிஓ செல்வத்திடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
திருவண்ணாமலை தாலுகாவில் அரசு உரிமம் பெற்ற சுமார் 45 பட்டாசு கடைகள் உள்ளன. அதில், பெரும்பாலானவை ஆண்டு முழுவதும் செயல்படுகின்றன. ஜிஎஸ்டி. குடிமக் கட்டணம், தொழில்வரி ஆகியவற்றை முறையாக செலுத்தி வருகிறோம்.
ஆனால், தற்காலிக உரிமம் எனும் பெயரில் வெளியூரிலிருந்து வந்து, இங்கு உரிமம் பெற்று பட்டாசுகளை தவறான முறையில் ஒரு கிலோ ரூ.555 என விற்பனை செய்கின்றனர். அதனால், இங்குள்ள பட்டாசு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. அதோடு, பட்டாசுகளை எடை போட்டு விற்பனை செய்வது பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும். பட்டாசு தயாரிக்கும் போது, அதன் எடையை அதிகரிக்க மண் அதிகம் சேர்க்கப்படும் பட்டாசுகளை கொண்டுவந்து எடை அளவில் விற்பனை செய்து பொதுமக்களிடம் மோசடி செய்கின்றனர். அதோடு, இதுபோன்ற எடை அளவில் பட்டாசு விற்பனை செய்யும் கடைகளுக்கு உரிமம் வழங்கியதிலும் விதிமீறல்கள் நடந்திருப்பதாக தெரிகிறது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்த இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


