Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குற்றப் பின்னணி உள்ளவர்களை கண்டறிய திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாமியார்களிடம் தீவிர விசாரணை

திருவண்ணாமலை, ஆக. 3: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் சாமியார்கள் போர்வையில் தங்கியுள்ளனரா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரமாகும். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். எனவே, சமீப காலமாக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வரும் சாமியார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கிரிவலப்பாதை மற்றும் ஆசிரம பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாமியார்கள் நிரந்தரமாக தங்கியுள்ளனர்.

மேலும், பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான சாமியார்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஆன்மிக உணர்வுடன் திருவண்ணாமலையில் தங்கியுள்ள சாமியார்களுக்கு மத்தியில், குற்றப் பின்னணி உள்ள சிலரும் சாமியார்கள் போர்வையில் தங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கம் உள்ள சிலரும் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், இரவு நேரத்தில் கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் அடாவடியில் ஈடுபடுவது, நடைபாதையை ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்துவது என தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுகின்றன. எனவே, எஸ்பி உதயகுமார் உத்தரவின்பேரில், திருவண்ணாமலை ரூரல் டிஎஸ்பி ராஜா மற்றும் மேற்கு போலீசார் நேற்று கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாமியார்களிடம் தீவிர சோதனை நடத்தினர்.

ஏற்கனவே, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை ஒருங்கிணைந்து வழங்கிய அடையாள அட்டை வைத்துள்ளனரா, எவ்வளவு காலம் கிரிவலப் பாதையில் தங்கி உள்ளனர், அவர்களுடைய பின்னணி குறித்து தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சாமியார்களை செல்போனில் படம் பதிவு செய்ததோடு அவர்களின் கைரேகை சரிபார்க்கப்பட்டது. மேலும், அவர்கள் வைத்திருந்த உடமைகளையும் சோதித்தனர். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.