Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஆரணி அருகே பட்டப்பகலில் துணிகரம்; தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 12 சவரன் நகை, பணம் திருட்டு: தனிப்படை அமைத்து விசாரணை

ஆரணி, ஜூலை 3: ஆரணி அருகே பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 12 சவரன் நகை, பணம் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு கஸ்தூரி பாய் நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(36), இவர் ஆரணியில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது, மனைவி மகேஸ்வரி(30). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் ராஜசேகர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பெண் குழந்தை எதிர் வீட்டில் உள்ள குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இதனால் மகேஸ்வரி தனது குழந்தைக்கு உணவு ஊட்டுவதற்காக சாப்பாடு போட்டுக் கொண்டு, வீட்டின் கதவுகள், முன்பக்க கேட்டை சாத்திவிட்டு, எதிர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவரது குழந்தைக்கு உணவு கொடுக்க சென்றார். பின்னர் உணவு கொடுத்து முடித்துவிட்டு தனது குழந்தையை அழைத்துக் கொண்டு மகேஸ்வரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் சந்தேகமடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ திறந்த நிலையில், துணிகள், பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 12 சவரன் நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மகேஸ்வரி ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் அன்பரசி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருவண்ணாமலையில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்படப்பட்டது. இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் ராஜகேசரின் மனைவி மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் டவுன் இன்ஸ்பெக்டர் அன்பரசி தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து நகை, பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் நகை, பணம் திருடிச்சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.