Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் காது கேட்கும் திறன்: முதன்முறையாக நடத்தி டாக்டர்கள் சாதனை

திருவண்ணாமலை, ஜூலை 1: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் வரலாற்றுச் சிறப்புமிக்க காக்ளியர் இம்ப்ளான்ட் (மின்னணு காதுக்கருவி) நவீன அறுவை சிகிச்சை மூலம் இரண்டு வயது குழந்தை காது கேட்கும் திறன் பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட சுகாதார வரலாற்றில் ஒரு புதிய முத்திரையாக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதன்முறையாக ‘காக்ளியர் இம்ப்ளான்ட்’ அறுவை சிகிச்சை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இரண்டு வயதுக் குழந்தைக்கு செய்யப்பட்ட இந்த அதிநவீன சிகிச்சை மூலம், மருத்துவமனையின் மேம்படுத்தப்பட்ட காக்ளியர் இம்ப்ளான்ட் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜமுனாமரத்தூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளர்களின் இரண்டு வயது பெண் குழந்தை பிறவியிலேயே கேட்கும் திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்ட இக்குழந்தைக்கு, விரிவான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு இந்த வாழ்வை மாற்றும் அறுவை சிகிச்சைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை தீவிர சிகிச்சைப் பிரிவில் நடைபெற்ற நேரடி அறுவை சிகிச்சை விளக்கக் காட்சியாக இந்தத் துல்லியமான அறுவை சிகிச்சையை, சென்னை மெர்ப் நிறுவனத்தின் இயக்குநரும், புகழ்பெற்ற ஈ.என்.டி மருத்துவருமான பத்மஸ்ரீ பேராசிரியர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் மேற்கொண்டார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி டீன் பேராசிரியர் டாக்டர் ஜெயலால் மற்றும் காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் கே.எம் இளங்கோ ஆகியோரின் தொலைநோக்குப் பார்வையாலும், முறையான திட்டமிடலாலும் இந்த அரிய சாதனை சாத்தியமாகியுள்ளது. மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையின் வெற்றிக்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். அறுவை சிகிச்சையின் போது துல்லியமான பராமரிப்பை வழங்கிய பேராசிரியர் பாலமுருகன் தலைமையிலான குழு, குழந்தை நலத்துறை பேராசிரியர் தக்ஷாயணி தலைமையிலான குழு, ரேடியோ டயக்னாசிஸ் (கதிரியக்கப் பரிசோதனைத் துறை) இதயவியல் துறை, மனநலத் துறை மாவட்ட ஆரம்பகாலத் தலையீட்டு மையம் குழு, மருத்துவ முன்னோடிகளின் கூட்டமைப்பு இந்த வரலாற்றுச் சாதனையைக் காண்பதற்காக அண்டை மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் முன்னணி ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணர்களும், பேராசிரியர்களும் இந்த சாதனை முயற்சியில் பங்கேற்றனர்.

நவீன அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய மருத்துவ குழுவினருக்கு, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மாலதி, துணை முதல்வர் டாக்டர் சங்கீதா மற்றும் வசிப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் கதிர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, பத்மஸ்ரீ பேராசிரியர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், கேட்கும் திறன் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். அப்போது கேட்கும் திறன் குறைபாடு என்பது வெறும் பேச்சுத் திறனை மட்டும் பாதிப்பதில்லை. அது ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த அறிவுத்திறன் மற்றும் மூளை வளர்ச்சியை நேரடியாகப் பாதிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்திலேயே அதிக பிரசவங்கள் நடக்கும் மருத்துவமனைகளில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையும் ஒன்று என்பதால், பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்ப நிலையிலேயே குறைபாட்டைக் கண்டறியும் முறையான உலகளாவிய நவதோ திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பிறவியிலேேய ேகட்கும் திறன் குறைவு ஏன்?

டாக்டர் மோகன் காமேஸ்வரன் மேலும் பேசுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் செய்துகொள்வது மற்றும் இளம் வயதுக் கர்ப்பம் போன்ற சமூக- மருத்துவக் காரணங்களால், பிறவியிலேயே கேட்கும் திறன் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இப்பகுதியில் அதிகமாக உள்ளது’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.