மாதவரம், செப்.30: தூக்க கலக்கத்தில் பாத்ரூம் சென்ற வடமாநில தொழிலாளி, 3வது மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக பலியானார். பெரம்பூர் ரமணா நகர் சுப்பிரமணி தோட்டம் தெருவில் புதிய வீடு கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இங்கு பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த தனஞ்ஜெய் குமார் மாட்டோ (37) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு, வீட்டின் 3வது மாடியில் உறங்கியுள்ளார்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் பாத்ரூம் செல்ல தூக்க கலக்கத்தில் எழுந்து வந்தபோது, 3வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில், கட்டு கம்பி முதுகில் குத்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளிகள் செம்பியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த தனஞ்ஜெய் குமார் மாட்டோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


