திருவள்ளூர், செப்.26: திருவள்ளூரில், அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் தேரடி அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் வாணி ஸ்ரீ தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் நாகமணி, மாவட்ட பொருளாளர் மணிமேகலா ஆகியோர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில், அடிப்படை ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிக்கொடையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.


