திருவள்ளூர், அக்.22: திருவள்ளூர் அருகே சாலையோரமாக நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் அடுத்து புல்லரம்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜோதிராமன் (55). இவர், நேற்று முன்தினம் புல்லரம்பாக்கம் காந்தி நகரில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் சாலையில் இடது ஓரமாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத வாகனம், ஜோதிராமன் மீது அதிவேகமாக மோதிவிட்டு சென்றது. இதில், வலது கணுக்கால் முழுவதும் காயமடைந்து கீழே விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ஜோதிராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


