திருவள்ளூர், ஆக.20: திருவள்ளூரில் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில், திருவள்ளூர் மாவட்ட அணி முதலிடம் பிடித்தது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதில், 8 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 6 வயது முதல் 23 வயது வரை உள்ள 150 வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதன் போட்டி ஒன்றில் வேப்பம்பட்டு டிஎஸ்டி அணி, செவ்வாய்பேட்டை அதியமான் அணி, அம்பத்தூர் அணி ஆகியவை முதல் மூன்று இடத்தை பிடித்தன. மற்றொரு போட்டியில், திருவள்ளூர் மாவட்ட அணி முதல் இடத்தை பிடித்து கோப்பையை தனதாக்கியது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



