அம்பத்தூர், ஆக.14:அம்பத்தூர், புதூர் அருகே ராம் நகர், பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் 11ம் வகுப்பறையில் உள்ள மேற்கூரையின், சிமென்ட் பூச்சு திடீரென பெயர்ந்து மேஜையில் அமர்ந்திருந்த நான்கு மாணவிகளின் தலை மற்றும் தோள்பட்டை மீது விழுந்தது.
இதில், மாணவி ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, முகத்தில் சிராய்ப்பும் ஏற்பட்டது. மற்ற 3 மாணவிகள் லேசான காயமடைந்தனர். இதையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தால், அப்பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சிடைந்தனர். இதையடுத்து, பள்ளி வளாகம் முழுவதும் உள்ள அனைத்து கட்டிடங்களையும், ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.



