திருவள்ளூர், ஆக.14: திருவள்ளூர் அடுத்த மேல்நலத்தூர் பகுதியை சேர்ந்தவர் குறளரசன் (48). தனியார் தொழிற்சாலை ஊழியரான இவர், கடந்த மாதம் 27ம் தேதி குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தனர். நேற்று, வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10 சவரன் தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.அதிர்ச்சியடைந்த குறளரசன், இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மாங்காடு பகுதியை சேர்ந்த சஞ்சய் (24), ஆகாஷ் (20) என்பதும், இவர்கள் 2 பேரும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



