அம்பத்தூர், ஆக.13: சென்னை பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக, அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வடமாநில வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, போலீசார் வாலிபரை காவல் நிலையம் கொண்டு வந்து நடத்திய விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சின்ட்டு குன்டியா (26) என்பதும், இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள வடமாநில வாலிபர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்த ரூ.50,000 மதிப்புடைய 5 கிலோ கஞ்சாவினை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



