ஆவடி, ஆக.13:ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகர் பிரதான சாலையில் சலூன், மெடிக்கல் ஷாப், ஓட்டல், காய்கறி கடைகள், டிராவல்ஸ், ஹார்டுவேர்ஸ் உட்பட பல்வேறு கடைகளின் டிஜிட்டல் பலகைகள், தற்காலிக கூரைகள் ஆகியவை சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சாலையோரம் வாகனங்களை நிறுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து முதல்வர் தனி பிரிவுக்கு தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார்.
ஆனாலும், கடை உரிமையாளர்கள் தாங்களாக சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று வைஷ்ணவி நகர் பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். சாலையின் இருபுறமும் இருந்த கடைகளில் பெயர் பலகைகள், மேற்கூரைகள் ஆகியவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி சீரமைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



