திருத்தணி, ஆக.12: தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை சார்பில், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை ஆந்திர எல்லை கிராமங்களில் பெண்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி ஆட்டோ, பேருந்து, வேன், ரயில்களில் ஆந்திராவிற்கு கடத்தி பாலிஷ் போட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரயில்வே போலீஸ் எஸ்.பி ராஜனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் ரயில் போலீசார் நேற்று காலை திருத்தணி ரயில் நிலையத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ரயில் நடைமேடை பகுதிகளில் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் அரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ரயில் நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்படும் என்றும், குறிப்பாக ஆந்திராவிற்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் சோதனை நடத்தி ரேஷன் அரிசி கடத்தும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போலீசார் எச்சரித்தனர்.



